சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைமுறைகளில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வரத் தவறும் பக்தர்கள், அதே முன்பதிவைப் பயன்படுத்தி மீண்டும் தரிசனத்திற்கு அனுமதி பெற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு நடைமுறைகளைப் பக்தர்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலி முன்பதிவுகளைத் தடுக்க புதிய நடவடிக்கை!
சபரிமலையில் ஆன்லைன் தரிசன முன்பதிவு செய்தவர்களில் கணிசமானோர் குறிப்பிட்ட நாளில் தரிசனத்திற்கு வருவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பக்தர்களுக்காக ஒதுக்கப்படும் தரிசன நேரங்கள் வீணாவதாகவும், சில சுற்றுலா நிறுவனங்கள் மொத்தமாக முன்பதிவு செய்து அவற்றை முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, முன்பதிவு முறையில் ஆதார் அடிப்படையிலான ஓடிபி (OTP) சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபியைப் பதிவு செய்த பின்னரே ஆன்லைன் முன்பதிவு செய்ய முடியும்.
மேலும், குறிப்பிட்ட தேதியில் சபரிமலைக்குச் செல்ல முடியாத பக்தர்கள், தரிசன நாளுக்கு முன்பாகவே முன்பதிவை ரத்து செய்யவோ அல்லது வேறு தேதிக்கு மாற்றவோ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தினமும் கூடுதலாக 5,000 பக்தர்களுக்கு அனுமதி!
இதற்கிடையே, நவம்பர் 30-ம் தேதி வரை தினசரி கூடுதலாக 5,000 பக்தர்களுக்கு விர்ச்சுவல் கியூ மூலம் தரிசன அனுமதி வழங்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தினசரி தரிசன அனுமதி எண்ணிக்கை 85 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பம்பையில் செயல்பட்டு வந்த ஸ்பாட் புக்கிங் மையம் மீண்டும் திறக்கப்படாது என்றும், நிலக்கல்லில் தொடர்ந்து ஸ்பாட் புக்கிங் வசதி செயல்படும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. எருமேலி, வண்டிப்பெரியார் சத்திரம், செங்கன்னூர் ஆகிய இடங்களிலும் ஸ்பாட் புக்கிங் வசதி உள்ளது.
முன்பதிவு செய்துவிட்டு செல்லாதவர்களுக்கு உண்மையில் தடை உள்ளதா?
இந்த விவகாரத்தில் ஒரு முக்கியமான விளக்கமும் வெளியாகியுள்ளது. முன்பதிவு செய்துவிட்டு தரிசனத்திற்கு வராதவர்களுக்கு மீண்டும் முன்பதிவு செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அத்தகைய தடை எதுவும் தற்போது அமல்படுத்தப்படவில்லை என்று பத்தனம்திட்டா மாவட்ட கூடுதல் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளதாக 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஏற்கெனவே முன்பதிவு செய்த தரிசன நேரம் முடிவடைந்த பிறகு, பக்தர்கள் புதிய நேரத்தை முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் பயணத்திட்டத்தை உறுதிப்படுத்தி, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைச் சரிபார்த்து முன்பதிவு செய்வது அவசியம்.



.png)