இந்தியா

உ.பி. தேர்தல் 2027: வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை... அகிலேஷ் யாதவின் அதிரடி வாக்குறுதிகள்!

top-news

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் புதிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை, 5 ஆண்டுகளில் 25 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
'ஜன் மன் கா தேர்தல் அறிக்கை' மற்றும் 'சத்தாய்ஸ் கா சங்கல்ப்: பிடிஏ கா பிரண பத்திரம்' என்ற பெயர்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சமூகநீதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் இதனை வெளியிட்டார்.

பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை
தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. அதன்படி, பட்டப்படிப்பு முடித்தும் வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சி உறுதியளித்துள்ளது.
மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் தாமதத்தைத் தவிர்க்க ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு அறிவிப்பு கால அட்டவணை வெளியிடப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரே கட்டத் தேர்வுகள் 3 மாதங்களுக்குள்ளும், பல கட்டத் தேர்வுகள் 6 மாதங்களுக்குள்ளும் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 நிதியுதவி
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு ரூ.40,000 நிதியுதவி வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.
மேலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையில் புதிய ஆட்சேர்ப்புகளின்போது 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இலவச லேப்டாப், 26 ஆயிரம் பள்ளிகள் திறப்பு
கல்வித்துறையிலும் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மீண்டும் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூடப்பட்டுள்ள 26 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், அனைத்து தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறைக்காக மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீத நிதி ஒதுக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம்
விவசாயிகளின் நலனுக்காக விவசாயக் கடன்கள் உடனடியாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 23 வகையான விவசாயப் பொருட்கள் மற்றும் பாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படும் என்றும் சமாஜ்வாதி கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை விரைந்து வழங்க ரூ.15,000 கோடி நிதியம் உருவாக்கப்படும் என்றும், கரும்புக்கான கொள்முதல் விலை ஆண்டுதோறும் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதுடன், விவசாயப் பாசனத்திற்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீடு
சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் வென்டிலேட்டர் வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உயர் சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்
அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளில் ஒன்றான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சமாஜ்வாதி கட்சி உறுதியளித்துள்ளது.
மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக மாநில பட்ஜெட்டில் 20 சதவீத நிதி ஒதுக்குதல், தகுதியான பிரிவினருக்கு அரசு ஒப்பந்தங்களில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன.
ஏழைகள், பெண்கள் மற்றும் பிடிஏ (PDA) பிரிவினருக்காக மாநிலம் முழுவதும் சமாஜ்வாதி உணவகங்கள் அமைத்து ரூ.5-க்கு உணவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் களத்தில் கவனம் பெறும் சமாஜ்வாதி கட்சி
2027 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்தத் தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்பு, பெண்கள் நலன், விவசாயிகள் பிரச்சினைகள், கல்வி, மருத்துவம் மற்றும் சமூகநீதி ஆகியவை முக்கியத்துவம் பெற்றுள்ளன.
குறிப்பாக, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல், 25 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியும் முக்கிய அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வாக்குறுதிகள் அனைத்தும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தப்படும் என சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், அகிலேஷ் யாதவின் தேர்தல் அறிக்கை உத்தரப் பிரதேச அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.