இந்தியா

பிரதமர் மோடியின் வாழ்த்துக் கடிதம்! காவியா மாறன் – அனிருத் தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்து தெரிவித்த பிரதமர்!

top-news

சென்னை: சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறன் மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் மூலம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்துக் கடிதம் தற்போது கவனம் பெற்றுள்ளது.


கிரீஸில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவருமான காவியா மாறனைத் திருமணம் செய்துள்ளார்.


இவர்களது திருமணம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.


சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு!

திருமணத்தைத் தொடர்ந்து, காவியா மாறன் - அனிருத் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (நவம்பர் 21) சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் எனப் பலரும் கலந்துகொண்டு புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

இந்நிலையில், காவியா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரால் நேரில் கலந்துகொள்ள முடியாத சூழலில், கடிதம் வாயிலாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், காவியா மற்றும் அனிருத் தங்களது வாழ்க்கையின் புதிய பயணத்தை நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் தொடங்கும் இந்த மங்களகரமான தருணத்தில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், புதுமணத் தம்பதியினர் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் மீதான அன்பையும் பாசத்தையும் வளர்த்துக்கொண்டு, நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும், குடும்பத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

தொடர்ந்து, நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் திருமணக் கொண்டாட்டங்களுக்கு தன்னை அழைத்ததற்காக கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறனுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடியின் இந்த வாழ்த்துக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் வாழ்த்துகளால் காவியா - அனிருத் திருமணக் கொண்டாட்டங்கள் மேலும் களைகட்டியுள்ளன.