ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் உள்ள டச்சான் வனப்பகுதியில் சிறப்பு காவல் அதிகாரிகளான (SPO) பாபி சந்த் (57) மற்றும் ரஷ்பால் குமார் (45) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
ரோந்துப் பணியின்போது மாயம்!
கடந்த புதன்கிழமை (நவம்பர் 11) பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், கியார் கிராமத்தில் உள்ள பாதுகாப்பு முகாமிலிருந்து மார்வா பகுதியில் அமைந்துள்ள தர்னா ராணுவ முகாமை நோக்கி இருவரும் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் பயணித்த வனப்பகுதியில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களது செல்போன்களும் அணைக்கப்பட்டிருந்ததால், இருவரும் காணாமல் போனது தெரியவந்தது.
தீவிர தேடுதல் வேட்டை!
இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம், மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து அடர்ந்த வனப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை தர்னா டாப் வனப்பகுதியில் காணாமல் போன இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டனர். அவர்களது உடல்களில் பல துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த காயங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுதங்கள் மாயம்... பயங்கரவாத தாக்குதல் சந்தேகம்!
மேலும், உயிரிழந்த இரு காவல் அதிகாரிகளிடமும் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் காணாமல் போயுள்ளன. இதனால், ஆயுதங்களைக் கொள்ளையடிக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டச்சான் மற்றும் மார்வா வனப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தத் தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.



.png)