இந்தியா

இந்தியாவை பிளவுபடுத்தும் சக்திகளை ஒன்றிணைந்து தோற்கடிப்போம்! டெல்லி தசரா விழாவில் பிரதமர் மோடி அழைப்பு

top-news

புதுடெல்லி, அக்டோபர் 21: நாட்டின் ஒற்றுமைக்கும் கண்ணியத்திற்கும் எதிராகச் செயல்படும் சக்திகளை அடையாளம் கண்டு தோற்கடிக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

தேச நலனுக்காக ஒன்றிணைய அழைப்பு!

டெல்லி ஐ.பி. எக்ஸ்டென்ஷனில் அக்டோபர் 20ஆம் தேதி நடைபெற்ற விஜயதசமி கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், நாட்டின் கண்ணியத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துபவர்கள், சமூகத்தைப் பிளவுபடுத்துபவர்கள் மற்றும் இந்தியக் கலாசாரத்தின் மீது வெறுப்பை வளர்ப்பவர்கள் நாட்டிற்கு எதிரான சக்திகள் எனக் குறிப்பிட்டார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய அமைப்புகளும் கருத்து வேறுபாடுகளைக் கடந்து தேச நலனுக்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தற்சார்பு இந்தியாவே இலக்கு!

ராமரின் வாழ்க்கையை எடுத்துக்காட்டிய மோடி, சவால்களை எதிர்கொள்ள பிறரைச் சார்ந்திருக்காமல் சொந்தத் திறன், வளங்கள் மற்றும் மக்கள் பங்கேற்பை நம்ப வேண்டும் என்றார்.

கடந்த 12 ஆண்டுகளில் வெளிநாடுகளிலிருந்து 650-க்கும் மேற்பட்ட பழங்காலச் சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உண்மை மற்றும் மனிதநேயத்தின் பக்கம் நிற்கும்போது இறுதியில் வெற்றி நிச்சயம் என்பதே விஜயதசமி உணர்த்தும் செய்தி என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.