இந்தியா

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலம்: 6-ம் நாளில் அனுமன் வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா!

top-news

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளில், உற்சவர் மலையப்ப சுவாமி அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அனுமன் வாகனத்தில் நான்கு மாடவீதிகளிலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்

வீதியுலாவின்போது வேதபாராயணம், மங்கள வாத்தியங்கள் மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா...’ என முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அனுமன் வாகனம் பக்தி, விசுவாசம் மற்றும் இறைசேவையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதனால் பிரம்மோற்சவ விழாவில் அனுமன் வாகன சேவை தனிச்சிறப்பு பெற்றுள்ளது.

விழாவை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, குடிநீர் மற்றும் தரிசன ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.