சென்னை, அக்டோபர் 13: தமிழகத்தின் நதிநீர் தேவைகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக முதலமைச்சர் விஜய் இன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
சென்னைக்கு கிருஷ்ணா நீர் வழங்குவது குறித்து ஆலோசனை
தெலுங்கு கங்கை திட்டத்தின்படி, சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா நதிநீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும். ஆனால், அக்டோபர் 9 வரை தமிழகத்திற்கு 2.251 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மீதமுள்ள நீரை வழங்குவது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவிடம் முதல்வர் விஜய் வலியுறுத்த உள்ளார்.
நதிகள் இணைப்புத் திட்டம் குறித்தும் பேச்சு
கோதாவரி - கிருஷ்ணா - காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் மற்றும் தமிழகத்தை நோக்கிப் பாயும் ஆறுகளில் ஆந்திர அரசு முன்மொழிந்துள்ள அணைத் திட்டங்கள் குறித்தும் இரு முதலமைச்சர்களும் ஆலோசிக்க உள்ளனர்.
இந்தச் சந்திப்பில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முக்கிய சந்திப்பு
இன்று பிற்பகல் விஜயவாடா செல்லும் விஜய், சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தொடர்ந்து ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, இரவு சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தின் குடிநீர் தேவை மற்றும் இரு மாநில நதிநீர் பங்கீடு தொடர்பான இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.



