புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளனர். இதையொட்டி தலைநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர் துவாரில் இருந்து காலை 10.30 மணியளவில் பேரணி தொடங்கி, தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தை நோக்கிச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தொடர்பான சர்ச்சைகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட இந்தப் பேரணி நடத்தப்படுகிறது.
பேரணியை முன்னிட்டு நாடாளுமன்றம், தேர்தல் ஆணைய அலுவலகம், ஜந்தர் மந்தர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த சுமார் 4,000 பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய டெல்லியின் பல பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, இண்டியா கூட்டணியின் பேரணியில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்காது என அக்கட்சி தெரிவித்துள்ளது.



.png)