புதுடெல்லி: இந்திய விமானப்படையின் போர் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை நடப்பு நிதியாண்டு முடிவுக்குள் இறுதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
பிரான்சிடம் இருந்து 114 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. விலை நிர்ணயம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இரு தரப்பிலும் ஆலோசனை நடைபெற்று வருவதாக ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். ஏற்கனவே இந்திய விமானப்படையிடம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல்-எம் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தமும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
114 விமானங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு விமானத் தயாரிப்பு மற்றும் பாதுகாப்புத் துறையின் தன்னிறைவை மேம்படுத்தும் முயற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்திய விமானப்படையின் போர் விமானப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், ஆண்டுக்கு குறைந்தது 36 முதல் 40 போர் விமானங்கள் வரை சேர்க்க வேண்டிய தேவை இருப்பதாக ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.



.png)