புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பான விவகாரம் மற்றும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து ஆலோசிக்க, காங்கிரஸ் தலைமையில் இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில், தலைமைத் தேர்தல் ஆணையர் தொடர்பான நடவடிக்கைகள், எஸ்.ஐ.ஆர். விவகாரம் மற்றும் அடுத்தகட்ட போராட்டங்களை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இண்டியா கூட்டணியில் இருந்து விலகியுள்ளதாக திமுக ஏற்கனவே தெரிவித்துள்ளதால், இன்றைய கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் கட்சியுடனான தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை காரணமாகக் குறிப்பிட்டு, கூட்டத்தில் கலந்து கொள்வதில் உடன்பாடு இல்லை என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் நேரடியாகக் கலந்து கொள்ளாமல், தனது கட்சியின் பிரதிநிதியை அனுப்பியுள்ளார். இடதுசாரிகள், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இண்டியா கூட்டணியின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.



.png)