உஜ்ஜைன்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2028-ம் ஆண்டு சிம்ஹஸ்த கும்பமேளா நடைபெற உள்ளதை முன்னிட்டு உஜ்ஜைன் நகரில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளுக்கு மசூதியின் ஒரு பகுதி இடையூறாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மசூதியின் ஒரு பகுதியை அகற்றும் நடவடிக்கை தொடங்கிய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், சில இடங்களில் கல் வீச்சு சம்பவங்கள் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதுடன், பாதுகாப்புப் பணிக்காக 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். போராட்டம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மசூதியின் ஒரு பகுதியை அகற்றுவதற்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வு அனுமதி வழங்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



.png)