இந்தியா

அக்.11-ல் சென்னை வரும் பிரதமர் மோடி: பிரம்மாண்ட வரவேற்புக்கு பாஜக திட்டம்

top-news

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11-ம் தேதி சென்னை வர உள்ள நிலையில், அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க தமிழக பாஜக சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பூந்தமல்லி-வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் போரூரில் இருந்து சென்னை ஐஐடி வளாகத்துக்கு செல்லும் பிரதமர், அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

பிரதமரின் பயணத்தையொட்டி, போரூரில் இருந்து ஐஐடி வளாகம் வரையிலான வழித்தடத்தில் பாஜக சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேள தாளங்கள் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை பாஜக நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.