இந்தியா

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை முதல் 3 நாள் வேலைநிறுத்தம்: வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

top-news

புதுடெல்லி: நாடு முழுவதும் வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனால் பொதுத்துறை வங்கிகளின் கிளை சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களது முக்கிய வங்கி பணிகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐந்து நாள் வங்கி வேலை வாரத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அமைப்பு வங்கி ஊழியர்களில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறுகிறது. 

வேலைநிறுத்தம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் வங்கி நிர்வாகங்கள் ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வேலைநிறுத்தத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன. எனினும், ஐந்து நாள் வங்கி வேலை வாரம் தொடர்பான கோரிக்கையில் முன்னேற்றம் ஏற்படாததால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என UFBU தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, வேலைநிறுத்தத்துக்கு முந்தைய நாளான செப்டம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் செயல்பட உள்ளன. வாடிக்கையாளர்கள் முக்கிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கி கிளைகள், அலுவலகங்கள், ஏடிஎம் இணைப்பு கிளைகள் மற்றும் கரன்சி செஸ்ட்கள் செயல்பட ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. 

வேலைநிறுத்த காலத்தில் ஏடிஎம், யுபிஐ, இணைய வங்கி, மொபைல் வங்கி உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. இருப்பினும், கிளை சார்ந்த சில சேவைகளில் தாமதம் அல்லது இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுத்துறை வங்கிகளுடன் சில பழைய தலைமுறை தனியார் வங்கிகளின் சேவைகளும் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் வழக்கமான செயல்பாடுகளைத் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.