புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பான விவகாரம் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து ஆலோசிக்க, காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி கட்சிகள் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி புதுடெல்லியில் கூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் SIR நடைமுறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை உருவாக்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்க்கட்சகள் முன்வைக்கும் கவலைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமார் தொடர்பாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. SIR நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சில எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைமையுடனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபியுடனும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ராகுல் காந்தியுடனும் இந்த விவகாரம் குறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதன் மூலம், தேர்தல் ஆணையம் தொடர்பான விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரும் புதிய நோட்டீஸை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்வது குறித்தும் எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.
அதேநேரத்தில், தேர்தல் ஆணையம் தனது முடிவுகள் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டவை என்றும், SIR உள்ளிட்ட விவகாரங்களில் ஆணையத்தின் முடிவுகள் ஒருமித்தே எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ள INDIA கூட்டணி ஆலோசனை, தேர்தல் ஆணையம் மற்றும் SIR தொடர்பான எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு முக்கியத்துவம் பெறுகிறது.



.png)