இந்தியா

மலப்புரத்தில் திடீர் காட்டாற்று வெள்ளம்: 5 பேர் உயிரிழப்பு! ஒருவர் மாயம், தீவிரமாகும் மீட்புப் பணி

top-news

மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே கொட்டப்புழா ஆற்றில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போன நிலையில், அவரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

ஞாயிற்றுக்கிழமை மாலை வனப்பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து கொட்டப்புழா ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்தது. இதனால் டி.கே. காலனி மற்றும் பூக்கோட்டும்பாடம் பகுதிகளில் ஆற்றங்கரையிலும் சுற்றுலா பகுதிகளிலும் இருந்தவர்கள் வெள்ளத்தில் சிக்கினர். 

இந்த சம்பவத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் திரூர், எடரிக்கோடு, கருவாரக்குண்டு மற்றும் வந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் சுற்றுலா சென்றவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையே, ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த உள்ளூர் பெண் ஒருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள், போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததாலும், இரவு நேரத்தில் வெளிச்சம் மற்றும் வானிலை காரணமாகவும் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. மீட்புப் பணிகள் நடைபெறும் நிலையில், பொதுமக்கள் ஆற்றங்கரை மற்றும் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.