புதுடெல்லி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை நடவடிக்கைகளில் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா அசாதாரண முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்பாடு செய்துள்ள “The Future of Environment and Climate Dynamics” என்ற சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, வளர்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்றும், இந்தியாவின் வளர்ச்சி வேகமாகவும் நிலைத்தன்மையுடனும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 12 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சூரிய மின் உற்பத்தித் திறன் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 2 ஜிகாவாட்டாக இருந்த நிலையில், தற்போது 160 ஜிகாவாட்டை கடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், காற்றாலை மின் உற்பத்தித் திறன் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும், நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதன் மூலம் நாட்டின் புதைபடிவமற்ற எரிசக்தி திறன் சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ் COP-21 மாநாட்டில் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாக நிறைவேற்றிய ஒரே G20 நாடு இந்தியா எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அதேவேளை, இந்தியாவின் தனிநபர் கார்பன் வெளியேற்றம் உலக சராசரியில் பாதிக்கும் குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, பசுமை போக்குவரத்து மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான தீர்வுகளில் இந்தியாவின் முயற்சிகள் தொடரும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.



