புதுடெல்லி: மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகிய நான்கு முக்கிய அம்சங்களுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முக்கிய அமர்வில் உரையாற்றிய அவர், இந்தத் துறைகளில் உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக இருப்பதாக கூறினார்.
உலகளவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றம், விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்ள பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு அவசியம் என மோடி வலியுறுத்தினார். உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நெருக்கடிகள் அதன் தாக்கத்தை ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துக்குள் மட்டுப்படுத்தாமல், உலகளவில் ஏற்படுத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முக்கியமான கனிம வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை அரசியல் அல்லது பொருளாதார ஆயுதமாக பயன்படுத்துவது பொதுவான வளர்ச்சிக்கு தடையாக அமையக்கூடும் என பிரதமர் எச்சரித்தார். அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரிக்ஸ் இன்குபேட்டர் நெட்வொர்க், ஸ்டார்ட்அப் புதுமை நிதி மற்றும் டிஜிட்டல் வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளையும் இந்தியா முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றிலும் கூட்டாக செயல்படுவதன் அவசியம் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாடு, உலகளாவிய தெற்கு நாடுகளின் வளர்ச்சி மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தது. மாநாட்டின் மூலம் உருவாகும் திட்டங்கள் மற்றும் முடிவுகள் நடைமுறையில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதும் பிரதமர் மோடியின் உரையில் முக்கியமாக இடம்பெற்றது.



