புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராவதற்குச் சீனாவும் ரஷியாவும் தங்களது முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
டெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'புதுடெல்லி பிரகடனத்தில்' (New Delhi Declaration) இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள சீனாவும் ரஷியாவும், சர்வதேச அளவில் வளரும் நாடுகளின் குரலை வலுப்படுத்தும் வகையில், ஐ.நா. அமைப்பில் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் கூடுதல் மற்றும் முக்கியப் பங்கை வகிக்க ஆதரவு தெரிவிப்பதாக அந்தப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளன.
உலகளாவிய முடிவெடுக்கும் அமைப்புகளில் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை தற்போதைய சர்வதேச சூழலுக்கு ஏற்ப மேலும் ஜனநாயகப்பூர்வமாகவும், செயல்திறன் மிக்கதாகவும் மறுசீரமைக்க வேண்டியது அவசியம் என்றும் பிரிக்ஸ் அமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



