குஜராத்: குஜராத்தில் ரூ.35,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரயில்வே, சாலை மற்றும் சரக்கு போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
வடோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்கு பிரத்யேக சரக்கு போக்குவரத்து வழித்தடத்தின் (Western Dedicated Freight Corridor) முக்கியப் பகுதிகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. சுமார் 326 கி.மீ. நீளமுள்ள இந்தப் பகுதிகள் ரூ.20,700 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் துறைமுகங்கள் மற்றும் தொழில் மையங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் இடையிலான ரயில் இணைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.9,700 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான மூன்று ரயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய ரயில் சேவைகளும் தொடங்கி வைக்கப்பட்டன.
சாலை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ரூ.1,780 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பிராந்திய இணைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வடோதரா ரிங் ரோடு விரிவாக்கம், மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டம், வீட்டு வசதி மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
இந்த திட்டங்கள் குஜராத்தின் போக்குவரத்து மற்றும் சரக்கு கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், தொழில் வளர்ச்சி, முதலீடு மற்றும் பிராந்திய பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



