இந்தியா

200 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை: திருவிழா போலக் கொண்டாடியக் குடும்பத்தினர்!

top-news

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் 200 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தையை, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை தேரில் ராஜமரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வந்து குடும்பத்தினர் திருவிழா போலக் கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 தலைமுறை காத்திருப்பு!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தஹிபாலே. இவர்களது குடும்பத்தில் கடந்த நான்கு தலைமுறைகளாக—அதாவது கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக—ஆண் குழந்தைகள் மட்டுமே தொடர்ந்து பிறந்து வந்துள்ளன. "நமது குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையாவது பிறக்காதா?" என்று நான்கு தலைமுறைகளாக ஏங்கித் தவித்த அக்குடும்பத்திற்கு, சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

200 ஆண்டு காலக் காத்திருப்புக்குப் பின் பிறந்த அந்தப் பெண் குழந்தைக்கு 'கார்கி' எனப் அன்போடு பெயரிட்டனர்.

தேரில் ராஜமரியாதை ஊர்வலம்: மருத்துவமனையிலிருந்து தாயும் சேயும் வீடு திரும்புவதற்காக அக்குடும்பத்தினர் செய்த ஏற்பாடு அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது. மருத்துவமனை வாசலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரத்யேக குதிரை தேர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

குழந்தையும் தாயும் தேரில் ஏறியதும், மேளதாளங்கள் முழங்க, உறவினர்கள் சாலையெங்கும் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மருத்துவமனையிலிருந்து வீடு வரை இப் பிரம்மாண்ட ரத ஊர்வலம் தொடர்ந்தது. வழியெங்கும் மக்கள் அக்குழந்தையின் மீது மலர்களைத் தூவித் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

சமூகத்திற்குப் பாடமாக அமைந்த கொண்டாட்டம்: இதுகுறித்து குழந்தையின் தந்தை நெகிழ்ச்சியுடன் கூறுகையில்,

"எங்கள் குடும்பத்திற்கு 200 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள மிகப்பெரிய சொத்து இந்தப் பெண் குழந்தை. பெண் குழந்தைகளைப் பாரமாக நினைக்கும் சமூகத்திற்கு மத்தியில், பெண் பிறப்பு என்பது போற்றிக் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்பதை உணர்த்தவே நாங்கள் இந்த ஊர்வலத்தை நடத்தினோம்," என்றார்.

பெண் சிசுக்கொலை மற்றும் பாகுபாடுகள் நிலவும் இன்றைய சூழலில், பெண் குழந்தையின் வருகையைக் கோலாகலமாகக் கொண்டாடிய தஹிபாலே குடும்பத்தினரின் இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களின் இந்த அர்த்தமுள்ள கொண்டாட்டத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.