புதுடெல்லி: மகாத்மா காந்தி கைப்பட எழுதிய 688 கடிதங்களின் தொகுப்பு, ஏலத்தில் ரூ.16.20 கோடிக்கு விற்பனையாகி, இந்திய வரலாற்று ஆவணங்கள் ஏலத்தில் புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியின் நெருங்கிய கூட்டாளியுமான ஆனந்த் டி. ஹிங்கோராணிக்கு காந்தி எழுதிய இந்தக் கடிதங்கள், அவரது குடும்பத்தினரால் பல தலைமுறைகளாக பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்தன.
ஹிங்கோராணியின் மனைவி வித்யா மறைந்தபோது அவருக்கு ஆறுதல் மற்றும் ஊக்கம் அளிக்கும் வகையில் காந்தி இந்தக் கடிதங்களை எழுதியுள்ளார். தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற கடிதப் பரிமாற்றம் பின்னர் தொகுக்கப்பட்டு 'A Thought of the Day' என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
இந்தக் கையெழுத்துப் பிரதிகளில் அகிம்சை, பிரம்மச்சரியம், அச்சமின்மை, மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு, பிரார்த்தனை, சேவை, உழைப்பு, சுயராஜ்யம், தார்மிக பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை காந்தி பதிவு செய்துள்ளார்.
இந்த ஏலத்தில் காந்தியுடன் தொடர்புடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் அடங்கிய 86 தொகுப்புகளும் விற்பனை செய்யப்பட்டன.
'Message on God' என்ற காந்தியின் கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய தொகுப்பு – ரூ.1.68 கோடி.
காந்தியின் பெட்டி ராட்டை மற்றும் 2 கடிதங்கள் அடங்கிய தொகுப்பு – ரூ.1.02 கோடி.
காந்தி எழுதிக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட, அவரது கையொப்பம் கொண்ட புகைப்படம் – ரூ.78 லட்சம்.
பொருளாதார சுதந்திரம் தொடர்பான கடிதங்கள், தந்திகள் மற்றும் அஞ்சல் அட்டைகள் அடங்கிய தொகுப்பு – ரூ.57.60 லட்சம்.
மகாத்மா காந்தியின் சிந்தனைகளையும், அவரது கையெழுத்தையும் நேரடியாகப் பதிவு செய்துள்ள இந்த ஆவணங்கள், இந்திய வரலாற்றின் முக்கியமான நினைவுச் சின்னங்களாகக் கருதப்படுகின்றன.



