இந்தியா

பிரதமர் மோடியின் பேச்சு நீக்கம்: பேஸ்புக் நிறுவனர் மார்க் மன்னிப்பு கேட்க வேண்டும் - நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தல்!

top-news

புதுடெல்லி:பிரதமர் நரேந்திர மோடியின் முகநூல் (Facebook) வீடியோ தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரத்தில், மெட்டா (Meta) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தனிப்பட்ட முறையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.  

நடந்தது என்ன?: நீட் தேர்வு மற்றும் வினாத்தாள் கசிவு மசோதா தொடர்பாக மாணவர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய வீடியோ பதிவு, ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து சுமார் 5 மணி நேரம் தொழில்நுட்பக் கோளாறு எனக் கூறி தற்காலிகமாக நீக்கப்பட்டது.  

நாடாளுமன்ற நிலைக்குழுவின் முக்கிய எச்சரிக்கைகள்:

நேரில் மன்னிப்பு: இச்சம்பவத்திற்கு மெட்டா பிரதிநிதிகள் கவலை தெரிவித்து விளக்கம் அளித்த போதிலும், மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஜூக்கர்பெர்க் நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும் என நிலைக்குழுத் தலைவர் நிஷிகாந்த் துபே தலைமையிலான குழு உத்தரவிட்டுள்ளது.  

சட்டப் பாதுகாப்பு நீக்கப்படும்: ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்கத் தவறினால், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 79-ன் கீழ் (Section 79 of IT Act) சமூக வலைத்தள தளங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பு (Safe Harbour Immunity) திரும்பப் பெறப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.  

3 நாட்கள் கெடு: 3 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு தாக்கல் செய்யப்படாவிட்டால், வெளியீட்டாளர் (Publisher) என்ற முறையில் மெட்டா மீது நேரடி சட்ட நடவடிக்கை பாயும் எனவும் நாடாளுமன்ற நிலைக்குழு கெடு விதித்துள்ளது.