பெங்களூரு: தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அல்லது கட்சி விவகாரங்களுக்காகவோ தன்னைச் சந்திக்க விரும்புபவர்கள் இனி தனது இல்லத்திற்கு வரவேண்டாம் என்று கர்நாடக துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வீட்டுக்கு வர வேண்டாம்: கட்சித் தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என்னைச் சந்திப்பதற்காகப் பெங்களூரில் உள்ள எனது இல்லத்திற்கு நேரடியாக வருவதைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாற்று ஏற்பாடு: பொதுமக்கள் மற்றும் தொண்டர்களைச் சந்திப்பதற்காக வாரத்தில் சில நாட்களை நான் பிரத்யேகமாக ஒதுக்கத் திட்டமிட்டுள்ளேன். அந்த விவரங்கள் விரைவில் முறையாக அறிவிக்கப்படும்.
அலுவலக முகவரி: என்னைச் சந்திக்க விரும்புபவர்கள் மற்றும் கோரிக்கை மனுக்களை அளிக்க நினைப்பவர்கள் பெங்களூரு குமாரக்ருபா சாலையில் உள்ள எனது அதிகாரப்பூர்வ அலுவலக முகவரிக்கு வந்து சமர்ப்பிக்கலாம்.
ஒத்துழைப்புக்கு வேண்டுகோள்: பொதுமக்களின் வசதிக்காகவும், நிர்வாகக் காரணங்களுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என டி.கே.சிவக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.



