புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, நாடு முழுவதும் டெலிகிராம் (Telegram) செயலிக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் இந்த நடவடிக்கை, "திருடனைப் பிடிக்காமல் பாதிக்கப்பட்டவனின் வீட்டுக்கு பூட்டுப் போடுவது போன்றது" என்று அவர் விமர்சித்துள்ளார்.
ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட்-யுஜி (NEET-UG 2026) மறுதேர்வை முன்னிட்டு, முறைகேடுகள் மற்றும் போலி வினாத்தாள் பரவலைத் தடுப்பதற்காக ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"'டெலிகிராம் தடை' — வினாத்தாள் கசிவைத் தடுக்க மோடி அரசு கண்டுபிடித்துள்ள புதிய தந்திரம்! அதாவது, வினாத்தாளைக் கசியவிட்ட திருடனைப் பிடிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட மாணவர்களின் வீட்டு வாசலில் பூட்டுப் போடுகிறார்கள்.
லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களின் கல்வித் தேவைகளுக்காக, குறிப்புகள் (Notes), மாதிரித் தேர்வுத் தொடர்கள், கலந்துரையாடல்கள் மற்றும் தேர்வுத் தயாரிப்புகளுக்காகப் பல ஆண்டுகளாக டெலிகிராமைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வசதியைப் பறிப்பது எப்படி வினாத்தாள் கசிவுக்குத் தீர்வாகும்?
இந்தத் தடை முறையானது அல்ல என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும், வினாத்தாள் கசிவை ஏற்படுத்தும் மாஃபியாக்களுக்கும் நன்றாகவே தெரியும். அப்படியென்றால், அரசின் அடுத்த தடை வாட்ஸ்அப் (WhatsApp) மீதுதானா?
தேர்வு நாளில் மாணவர்களைத் தீவிரமாகச் சோதனையிடுவார்கள், கத்தரிக்கோலால் சட்டப் பைகளைக் கிழிப்பார்கள், விமானப்படை மூலம் வினாத்தாள்களைக் கொண்டு செல்வார்கள் என விளம்பர உத்திகளுக்கு (Theatrics) எவ்விதக் குறைவும் இருக்காது. ஆனால், நோயின் மூலாதாரத்தை அழிக்க ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட மாட்டார்கள். ஏனெனில், இந்த அரசின் கண்காணிப்பின் கீழ்தான் வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் செழித்து வளர்ந்து, இளைஞர்களைக் கண்ணீர் வடிக்க வைக்கின்றனர்.
மோடி அவர்களே... இந்த விளம்பர உத்திகளை நிறுத்துங்கள். மாணவர்களைத் தண்டிப்பதை விடுத்து, வினாத்தாள் கசிவை உண்டாக்கும் மாஃபியாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள். மாணவர்களின் குரலுக்குச் (Chhatron Ki Goonj) செவிசாய்க்கத் தவறினால், தங்களின் உரிமைகளை எப்படிப் பெற வேண்டும் என்பது இந்த நாட்டு இளைஞர்களுக்குத் தெரியும்."
மத்திய அரசின் இந்தத் தடையால் மாணவர்கள் தங்களின் கல்விப் பொருட்கள் மற்றும் வழிகாட்டல்களைப் பெற முடியாமல் தவித்து வரும் சூழலில், அரசின் இந்த அணுகுமுறைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் தரப்பில் பரவலான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.



