சிம்லா: ஆசியக் கண்டத்தில் உள்ள மிகச்சிறந்த மலைப்பிரதேசங்கள் குறித்த தரவரிசைப் பட்டியலை முன்னணி சர்வதேச சுற்றுலா இணையதளமான 'அகோடா' (Agoda) வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சிம்லா, ஆசியாவிலேயே சிறந்த மலைப்பிரதேசமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் பனி மலைகள், காலனித்துவ காலத்துக் கட்டிடக் கலை மற்றும் இதமான வானிலை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள், சிம்லாவை தங்களின் விருப்பமான இடமாகத் தேர்வு செய்துள்ளனர். குறிப்பாக, யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமான கல்கா-சிம்லா மலை இரயில் பயணம் மற்றும் புகழ்பெற்ற மல்லு ரோடு (Mall Road) ஆகியவை இந்த வெற்றியில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.
இந்தப் பட்டியலில் இலங்கையின் நுவரெலியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மலேசியாவின் கேமரன் ஹைலேண்ட்ஸ் மூன்றாம் இடத்தையும், வியட்நாமின் சாப்பா நான்காம் இடத்தையும், இந்தோனேசியாவின் பான்டுங் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.
இந்தியாவின் 'மலைகளின் ராணி' என்று அழைக்கப்படும் சிம்லா, ஆசிய அளவில் முதலிடம் பிடித்திருப்பது இந்தியச் சுற்றுலாத் துறைக்குக் கிடைத்தப் பெருமையாகக் கருதப்படுகிறது. இந்த அங்கீகாரத்தால் வரும் காலங்களில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை சிம்லாவில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


