நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளிக்கு (அக்டோபர் 17) வெளியாக இருந்த இரண்டு படங்களில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) திரைப்படம் தனது வெளியீட்டைத் தள்ளிவைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதே நாளில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள மற்றொரு படமான 'டூட்' திரைப்படம் வெளியாகும் நிலையில், ஒரே ஹீரோவின் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் மோதிக் கொள்வதைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
படக்குழுவின் அறிவிப்பு:
இது தொடர்பாக 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரே தண்டவாளத்தில் வரும் இரண்டு ரயில்களைப் போல, மோதல் ஏற்பட்டால் யாருக்கும் உதவாது. எங்கள் அன்புக்குரிய கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனுக்காகவும், இரண்டு படங்களின் முயற்சிகளுக்கு மரியாதை அளிக்கும் விதமாகவும், LIK படத்தின் வெளியீட்டை டிசம்பர் 18, 2025 அன்று மாற்றுவதாக முடிவு செய்துள்ளோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
— Seven Screen Studio (@7screenstudio) October 6, 2025
மேலும், 'டூட்' படக்குழுவுடன் ஒருங்கிணைக்க முயற்சிகள் மேற்கொண்ட போதும் இணக்கமான நிலை எட்டப்படவில்லை என்றும், எனவே இரண்டு படங்களும் தனித்தனியே பிரகாசிக்க இதுவே சிறந்த வழி என்றும் 'LIK' தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ள 'டூட்' திரைப்படம் தீபாவளிக்கு (அக்டோபர் 17) வெளியாவது உறுதியாகியுள்ளதால், விக்னேஷ் சிவனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் தற்போது ரேஸில் இருந்து விலகியுள்ளது.


