சென்னை: மறைந்த புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதற்காக, நடிகை ராஷ்மிகா மந்தனா கர்நாடக இசை பயிலத் தொடங்கியுள்ளார்.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை மற்றும் இசைப் பயணத்தை மையமாகக் கொண்டு 'எம்.எஸ் - ஏ லெகசி ஆன் ஸ்கிரீன்' (MS - A Legacy On Screen) என்ற பெயரில் பிரம்மாண்ட பயோபிக் திரைப்படம் உருவாக்கப்படுகிறது. இப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னுரி இயக்குகிறார்; அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பன்னி வாஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இப்படத்திற்கான தனது தயாரிப்புகள் குறித்து ராஷ்மிகா மந்தனா பகிர்ந்து கொண்ட முக்கியத் தகவல்கள்:
முதல் முயற்சி: தனது வாழ்நாளில் இதுவரை பாடியதே இல்லை என்றும், வீட்டில் கூட முணுமுணுக்கும் பழக்கம் இல்லாத தனக்கு, இக்கதாபாத்திரம் மிகப்பெரிய சவாலாகவும் புதிய உலகமாகவும் அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிப்பல்ல, கற்றல்: எம்.எஸ். அம்மா கதாபாத்திரத்தில் வெறுமனே நடித்துக் காட்ட முடியாது; கர்நாடக இசையின் அடிப்படை மற்றும் அதன் உணர்வுகளை உள்வாங்க இசை கற்க வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
தயக்கமும் துணிச்சலும்: இத்தகைய மாபெரும் ஆளுமையின் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் முதலில் தயக்கம் இருந்தாலும், வருங்காலத் தலைமுறையினருக்கு அவரது வாழ்க்கை மற்றும் சாதனைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு முழு அர்ப்பணிப்புடன் உழைக்க உள்ளதாகவும் ராஷ்மிகா கூறியுள்ளார்.
முழு கவனம்: இப்படத்திற்காகப் பிற படங்களை ஒரே நேரத்தில் பலவற்றில் நடிப்பதைத் தவிர்த்து, குறிப்பிட்ட காலத்திற்கு இக்கதாபாத்திரத்திற்காக முழுமையாகத் தன்னை அர்ப்பணிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



