சினிமா

கார் பந்தயத்தில் தமிழ்நாடு அரசு லோகோ: நடிகர் அஜித்குமார் பெருமிதம் கலந்த விளக்கம்!

top-news

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற தனது 'அஜித் குமார் ரேசிங் அணி'யில் தமிழ்நாடு அரசின் SDAT (விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) இலச்சினையைப் பயன்படுத்தியதற்கான காரணத்தை நடிகரும், ரேஸ் வீரருமான அஜித்குமார் விளக்கியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து:

சர்வதேச அளவில் நடைபெற்ற கிரெவென்டிக் 24H ஐரோப்பிய என்டியூரன்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி ஒட்டுமொத்தமாக 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் எனது நண்பர் அஜித்குமார் பெருமையடையச் செய்துள்ளார். அவரது வாகனத்திலும், ஜெர்சியிலும் SDAT லோகோவை அவர் அணிந்ததற்கு தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்” என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

அஜித்குமார் அளித்த விளக்கம்:

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் வாழ்த்துக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்ததுடன், தனது உடையில் SDAT லோகோவை அணிந்ததற்கான காரணத்தையும் விளக்கினார்.

"விளையாட்டும், சினிமாவும் மக்களின் மனதிற்கு உற்சாகத்தையும், மனநலத்தையும் அளிக்கின்றன. என்னைப் போன்ற மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு சென்னையில் முதல் தெருப் பந்தயத்தை (Formula 4 Chennai Street Circuit) தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது. மோட்டார் ஸ்போர்ட்ஸை மேம்படுத்த அரசு எடுத்து வரும் இந்த முயற்சி, எங்களைப் போன்றோர்க்குப் பெரிய உந்துதலாக இருந்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) இலச்சினையை நாங்கள் எங்கள் உடையிலும், உபகரணங்களிலும் அணிந்துள்ளோம்" என்று நடிகர் அஜித்குமார் விளக்கமளித்துள்ளார்.

மேலும், தங்கள் அணிக்கு தமிழ்நாடு அரசு எந்தவித நிதியுதவியையும் அளிக்கவில்லை என்றும், SDAT பிற விளையாட்டுகளுக்கும் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாகவே இந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அஜித் குமார் ரேசிங் அணி, இந்தியத் திரைப்படத் துறையின் இலச்சினையையும் தங்கள் சீருடையில் பெருமையுடன் இடம்பெறச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.