நடிகர் மற்றும் கார் பந்தய வீரரான அஜித்குமார், இந்திய சினிமாவை உலக அரங்கில் பிரபலப்படுத்தும் விதமாக, தனது கார் மற்றும் ரேஸிங் உடையின் மீது இந்திய சினிமா (Indian Cinema) என்ற லோகோவை அச்சிட்டுள்ளார்.
'அஜித்குமார் ரேஸிங்' அணியின் மூலம் பல்வேறு சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் அஜித், இந்த லோகோவை தனது ரேஸ் கார் மற்றும் ஓட்டுநர் உடையில் பொறித்துள்ளார்.
உலகிலேயே அதிக திரைப்படங்களைத் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா முன்னணி வகிக்கிறது. இந்த லோகோ மூலம், இந்தியத் திரைப்படத் துறையை, பிராந்திய எல்லைகளைத் தாண்டி சர்வதேச ரசிகர்களுக்கு எடுத்துச் செல்ல அஜித் திட்டமிட்டுள்ளார்.
குறிப்பாக, ஆசிய லீ மான்ஸ் தொடர் உள்ளிட்ட அடுத்தடுத்த ரேஸிங் சீசன்களில் இந்தக் குழு பங்கேற்க உள்ள நிலையில், இந்த லோகோ சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது திரைப்படப் பணிகள் மற்றும் ரேஸிங் ஆர்வம் இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் அஜித், மோட்டார்ஸ்போர்ட் தளத்தைப் பயன்படுத்தி இந்திய சினிமாவின் பெருமையை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.


