சென்னை: தனது கணவரும் இயக்குநருமான கிருஷ்ண வம்சியை விட்டுப் பிரிந்துவிட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவி வந்த வதரிகைகளுக்குப் பிரபல முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ரம்யா கிருஷ்ணன். இவர் கடந்த 2003-ம் ஆண்டு பிரபல தெலுங்குத் திரைப்பட இயக்குநர் கிருஷ்ண வம்சியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார்.
ரம்யா கிருஷ்ணன் சென்னையிலும், அவரது கணவர் கிருஷ்ண வம்சி ஹைதராபாத்திலும் வசித்து வந்ததால், இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாகத் தகவல்கள் பரவி வந்தன.
வதந்திகளுக்கு ரம்யா கிருஷ்ணன் விளக்கம்: இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ள ரம்யா கிருஷ்ணன் கூறியதாவது:
தனித்தனியாக வசிக்கக் காரணம்: "நான் ஹைதராபாத்தில் தங்கிப் படங்களில் நடித்து வந்தபோது, சென்னை மற்றும் ஹைதராபாத் இடையே அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது நான் ஊரில் இல்லாதபோதெல்லாம் எனது மகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், மகனின் படிப்பு மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவனை சென்னையில் உள்ள பள்ளியில் சேர்க்க முடிவு செய்தோம். அதற்காக நானும் சென்னையிலேயே தங்க நேரிட்டது."
திருமண உறவு தொடர்கிறது: "நாங்கள் இருவரும் இன்னும் திருமண உறவில்தான் இருக்கிறோம். இது முழுக்க முழுக்க எங்களது குடும்பச் சூழல் மற்றும் பணி நிமித்தமாக எடுக்கப்பட்ட முடிவே தவிர, பிரிவினைக் காரணம் அல்ல. நாங்கள் இருவரும் தனித்தனி நகரங்களில் வசித்தாலும் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருக்கிறோம்."
நல்ல நண்பர்கள்: "அருகில் இருந்து சண்டையிட்டுக்கொள்வதைவிட, இப்போது நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். நடைமுறைச் சூழலுக்காக நாங்கள் எடுத்த இந்த முடிவு எங்களுக்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தங்களது விவாகரத்து குறித்துப் பரவிய அனைத்து வதந்திகளுக்கும் ரம்யா கிருஷ்ணன் திட்டவட்டமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

.png)

