இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் பரஸ்பரம் பிரிவதற்காக தாக்கல் செய்த விவாகரத்து வழக்கில், சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவித்துள்ளது.
சுமார் 11 ஆண்டுகள் திருமண உறவுக்குப் பிறகு, இருவரும் பரஸ்பர புரிதலுடன் பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர். இதையடுத்து, இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மத விவாகரத்து (Mutual Divorce) மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்து வந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 25, 2025) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வா சுந்தரி, இந்த விவாகரத்து வழக்கில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: இந்திய கேப்டனுக்கு சிக்கலா..? விசாரணையை உறுதி செய்த ஐசிசி!
விசாரணையின் போது, தங்களது 5 வயது மகளின் பராமரிப்பு விஷயத்தில் ஜிவி பிரகாஷ் குமார் தரப்பில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவயது நண்பர்களாக இருந்து காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த இசைத் தம்பதி, பிரிவதாக அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


