விளையாட்டு

இந்திய கேப்டனுக்கு சிக்கலா..? விசாரணையை உறுதி செய்த ஐசிசி!

top-news

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பை தொடரின்போது பாகிஸ்தானுக்கு எதிராக அவர் தெரிவித்த சில கருத்துகள் குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அளித்த அதிகாரபூர்வ புகாரை ஐசிசி ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டிக்குப் பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ், இந்திய வீரர்களின் வெற்றியைப் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களுக்கும் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

சூர்யகுமார் யாதவின் இந்தக் கருத்துகள், ஐசிசியின் நடத்தை விதிமுறைகளை (Code of Conduct) மீறும் வகையில் 'அரசியல் ரீதியானவை' என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் புகாரை ஆராய்ந்த ஐசிசி நடுவர் (Match Referee) ரிச்சி ரிச்சர்ட்சன், சூர்யகுமார் யாதவின் கருத்துகள் கிரிக்கெட் ஆட்டத்தின் "நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்" வகையில் உள்ளதாகக் கருதி, அவர் மீது குற்றச்சாட்டுகளைக் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக இந்திய அணியின் நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்கலாம் அல்லது ஐசிசி நடுவர் முன்னிலையில் முறைப்படியான விசாரணையை எதிர்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.