சென்னை: இந்திய திரையுலகின் பழம்பெரும் மற்றும் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாச ராவ் சென்னையில் நேற்று (அக்.3) இரவு காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய சிங்கீதம் சீனிவாச ராவ், புதுமையான கதைக்களம் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளுக்காக தனித்துவமான இடத்தைப் பெற்றவர்.
தமிழில் ‘திக்கற்ற பார்வதி’, ‘ராஜபார்வை’, ‘பேசும் படம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘மகளிர் மட்டும்’, ‘காதலா காதலா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக கமல்ஹாசனுடன் இணைந்து உருவாக்கிய பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
வசனங்களே இல்லாமல் உருவாக்கப்பட்ட ‘பேசும் படம்’, அறிவியல் புனைகதை சார்ந்த ‘ஆதித்யா 369’, ‘புஷ்பக விமானம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது பரிசோதனை முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாக அமைந்தன.
தேசிய திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சிங்கீதம் சீனிவாச ராவ், தனது நீண்ட திரைப்பயணத்திலும் புதுமையான சினிமா முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்தார். அவரது மறைவுக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



