சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் மற்றும் சிறுவன் சாய் பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகியுள்ள நிலையில், இயக்குநர் ஷங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் படத்தைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
‘பத்தா’ நல்ல கதை, மனிதநேயம், நகைச்சுவை மற்றும் கைதட்டல் பெறும் பல தருணங்களைக் கொண்ட அழகான திரைப்படம் என ஷங்கர் குறிப்பிட்டுள்ளார். நடிகர்களின் தேர்வும் அவர்களின் நடிப்பும் சிறப்பாக இருப்பதாகவும், படத்தின் காட்சிகளில் இடம்பெறும் முகபாவனைகள் கவனம் ஈர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் நடிப்பு உணர்வுப்பூர்வமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்ட ஷங்கர், சிறுவன் சாய் பிரித்விராஜின் நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது என்றும் பாராட்டியுள்ளார். லிஜோமோல் ஜோஸின் நடிப்பையும் அவர் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
மேலும், சாய் அப்யங்கரின் பின்னணி இசை வித்தியாசமாகவும், சில காட்சிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும் அமைந்துள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாலாஜி தரணிதரனின் மற்றுமொரு மறக்க முடியாத படைப்பு ‘பத்தா’ என்றும் அவர் பாராட்டியுள்ளார்.



