சினிமா

“சிக்மா மூலம் எனக்கென தனி அடையாளம் உருவாக்க வேண்டும்” : ஜேசன் சஞ்சய் மனம் திறந்த பேச்சு!

top-news

சென்னை: இயக்குநராக தனது முதல் படமான ‘சிக்மா’ மூலம் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க விரும்புவதாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். குடும்பப் பின்னணி தனக்கு இருந்தாலும், தனது படைப்பின் மூலம் தன்னை ஒரு இயக்குநராகவே ரசிகர்கள் அடையாளம் காண வேண்டும் என்பதே தனது விருப்பம் என அவர் கூறியுள்ளார். 

தமிழக முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தன்னை மக்கள் எப்படி பார்க்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், தனது குடும்பத்தின் பாரம்பரியம் எப்போதும் தன்னுடன் இருக்கும் என்றாலும், ஒரு படைப்பாளியாக தனக்கான பாதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். ‘சிக்மா’ படத்தை பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, இது ஜேசன் சஞ்சய் இயக்கிய திரைப்படம் என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு ஏற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

படத்துக்கு சாதகமான அல்லது பாதகமான விமர்சனங்கள் வந்தாலும், அந்த திரைப்படம் தனது சினிமா பார்வையை வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிக்மா’ வெளியான பிறகு, அதன் வரவேற்பைத் தொடர்ந்து திரைத்துறையில் தனது அடுத்தகட்ட பயணத்தை அமைத்துக்கொள்ள கவனம் செலுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், தனது தந்தை விஜய்யின் நகைச்சுவை உணர்வு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், எதிர்காலத்தில் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்த இயல்பான நகைச்சுவை பக்கத்தை திரையில் வெளிக்கொண்டு வர விரும்புவதாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.