சென்னை: யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமை விற்பனையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸுக்கு முன்பு சுமார் ரூ.150 கோடி வரை ஓடிடி ஆஃபர் கிடைத்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதன் மதிப்பு ரூ.30 கோடி அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம், தொடக்கத்தில் நல்ல வசூலை பதிவு செய்தாலும், அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்த்த வேகத்தை தக்கவைக்கவில்லை.
ரிலீஸுக்கு முன்பே முன்னணி ஓடிடி நிறுவனம் சுமார் ரூ.150 கோடி வழங்க முன்வந்ததாகவும், ஆனால் திரையரங்குகளில் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக டிஜிட்டல் உரிமைக்கு எதிர்பார்க்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் ஆரம்பகட்ட ஆஃபர் ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆனால், திரையரங்க வசூல் எதிர்பார்த்த அளவில் அமையாத நிலையில், ஓடிடி நிறுவனங்களின் ஆர்வமும் குறைந்துள்ளதாக தெரிகிறது. தற்போது அனைத்து மொழிகளுக்குமான டிஜிட்டல் உரிமைக்கு சுமார் ரூ.30 கோடி வரை மட்டுமே ஆஃபர் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உரிமை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் சில தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதற்கிடையில், ஓடிடி வெளியீட்டுக்காக படத்தின் புதிய எடிட் அல்லது மாற்றியமைக்கப்பட்ட பதிப்பை உருவாக்குவது குறித்தும் படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் தளத்தில் கூடுதல் பார்வையாளர்களை ஈர்த்து, ஓடிடி உரிமைக்கான மதிப்பை உயர்த்த முடியுமா என்ற முயற்சியும் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.



