சினிமா

திரையரங்குகளில் அதிரடி வெளியீடு: அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

top-news

சென்னை: நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்’ ஆவணப்படத்தின் சிறப்பு டிரெய்லர் தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப்படம், அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணம், கார் பந்தயங்களில் அவர் சந்தித்த சவால்கள் மற்றும் ரேசிங் மீதான அவரது ஆர்வம் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.

பொதுவாக திரைப்படங்களின் டிரெய்லர்கள் இணையத்தில் வெளியாகும் நிலையில், ‘கிளாடியேட்டர்ஸ்’ சிறப்பு டிரெய்லர் திரையரங்குகளில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டிரெய்லர் வெளியானபோது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 நிமிடங்களுக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த டிரெய்லருக்கு மத்திய தணிக்கை வாரியம் U/A 13 சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு செய்யப்பட்ட திரையரங்குகளில் டிரெய்லர் திரையிடப்பட்டது.

‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் மூலம், நடிகர் அஜித்தின் திரை பயணத்தைத் தாண்டிய மற்றொரு பரிமாணமான கார் பந்தய உலக அனுபவங்களை ரசிகர்கள் காண உள்ளனர்.