சினிமா

பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்பே எவிக்ஷன்: யூடியூபர் பிரசாந்த் வெளியேற்றப்பட்டதன் பின்னணி என்ன?

top-news

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தொடக்க நிகழ்ச்சியிலேயே யூடியூபரும் திரைப்பட விமர்சகருமான பிரசாந்த் ரங்கசாமி எதிர்பாராத வகையில் வெளியேற்றப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாகவே மேடையில் வைத்து அவர் எவிக்ட் செய்யப்பட்டார்.

பிரசாந்த் ரங்கசாமி, மாடல்களான பிரித்விநாத் மற்றும் ஜாவீத் ஷெரிப் ஆகியோருடன் மேடைக்கு அழைக்கப்பட்டார். மூவருக்கும் ஒரு தலைப்பு வழங்கப்பட்டு, தலா 2 நிமிடங்கள் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் பார்வையாளர்களின் நேரடி வாக்குப்பதிவு மூலம் இருவர் பிக் பாஸ் வீட்டுக்குள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற பிரசாந்த் வெளியேற்றப்பட்டார்.

இந்த எவிக்ஷன் தொடர்பாக பிரசாந்த் தனது சமூக வலைதளப் பதிவில், நிகழ்ச்சியில் எந்த விதியையும் மீறவில்லை என்றும், கடைசி நேரம் வரை தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடியதாகவும் தெரிவித்துள்ளார். நடந்ததை ஒரு கேம் ஷோவாகவே பார்ப்பதாகவும், எந்த வருத்தமும் ஏமாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 'காமன் மேன்' தேர்வு நடைமுறை குறித்து பிரசாந்த் முன்பு வெளியிட்டிருந்த விமர்சன வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அந்த விமர்சனத்துக்கும் அவரது வெளியேற்றத்துக்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்வியை சிலர் எழுப்பி வருகின்றனர். எனினும், இந்தக் காரணம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

பிரசாந்த் மட்டுமின்றி, பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தொடக்க நிகழ்ச்சியில் மேலும் சில போட்டியாளர்களும் மேடையிலேயே நடைபெற்ற வாக்குப்பதிவின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால், வழக்கமான எவிக்ஷன் முறைக்கு மாறாக இந்த சீசன் தொடக்கத்திலேயே புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.