நடிகர் விஷால், நடிகை தன்ஷிகாவை திருமணம் செய்யவிருப்பதாக, தனது பிறந்தநாளன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இருவரும் காதல் உறவில் இருந்ததாக முன்னரே தகவல் வெளியானது. இதுகுறித்து நடிகர் விஷால், சென்னை நடிகர் சங்க வளாகத்தில் நடைபெறும் முதல் திருமணம் தன்னுடையதுதான் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார். "இந்த பிறந்தநாளில் உலகம் முழுவதும் இருந்து எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இன்று, எங்கள் குடும்பத்தினர் சூழ, எனக்கும் என் அன்பு தன்ஷிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் மிகுந்த உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும், ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்புடன், விஷால் மற்றும் தன்ஷிகா நிச்சயதார்த்தம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இது திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இந்த இளம் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


