சினிமா

அஜித்துடன் முதல் முறையாக கைகோர்க்கும் கயாடு லோஹர்?

top-news

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இந்தப் படம் அஜித்தின் ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்தது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் பெரும் பாராட்டுகளைப் பெற்றார். மேலும் பிரபு, பிரசன்னா, திரிஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அஜித்குமாரின் 64-வது (AK64) திரைப்படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க உள்ளார் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. 'குட் பேட் அக்லி' படத்தைப் போலல்லாமல், இந்த புதிய திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ஒரு முழுமையான 'பேமிலி எண்டர்டெய்னர்' ஆக உருவாக இருப்பதாகவும், இதில் பார்வையாளர்களுக்குப் பல சர்ப்ரைஸ்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், 'AK64' திரைப்படத்தில் நடிகை கயாடு லோஹரை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாரா அல்லது வேறு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை.

தற்போது இந்தப் படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் (pre-production) நடைபெற்று வருகின்றன. அஜித்குமாரே இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளாரா அல்லது வேறு ஏதேனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதா என்பது குறித்த ஆலோசனைகள் நடந்து வருவதாகவும், அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.