பென்சில்வேனியா: ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், ஈரானின் பாலங்கள் மற்றும் அணு உலைகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பதற்றத்தின் பின்னணி: கடந்த ஜூலை 7-ஆம் தேதி ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் சென்ற வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா தொடர்ந்து ஈரானில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களால் ஈரானில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 260-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஈரானிய சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் உசைன் கெர்மான்பூர் தெரிவித்துள்ளார்.
பாலங்களைத் தகர்க்கும் திட்டம் குறித்து டிரம்ப் அளித்த பதில்: ஈரானில் உள்ள முக்கியப் பாலங்களை அமெரிக்கா குண்டுவீசி தகர்க்க திட்டமிட்டுள்ளதாகப் பரவிய தகவலை அடுத்து, பென்சில்வேனியா மாகாணத்திற்கு வந்திருந்த அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அதிபர் டிரம்ப்: "ஈரான் உடனடியாக எங்களுடன் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். அப்படித் திரும்பத் தவறினால், அடுத்த வாரத்தில் ஈரானின் எல்லைப் பகுதிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும். அப்போது அவர்களின் அணு உலைகளும், பாலங்களும் எங்களின் முக்கிய இலக்குகளாக இருக்கும்."
"யாரும் மிஞ்ச மாட்டார்கள்" – டிரம்ப் கடும் எச்சரிக்கை: அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி ஈரான் புதிய ஒப்பந்தம் ஒன்றை உடனடியாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திய டிரம்ப், "ஈரான் இதனைச் செய்யத் தவறினால், அந்நாட்டில் ஒருவரும் மீதம் இருக்க மாட்டார்கள்" என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும், "நாளை இரவே ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்த அதிரடி: எச்சரிக்கையாலும், இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.



