இத்தாலி: ஈரானுடன் தற்போது எட்டப்பட்டுள்ள உடன்பாடு இறுதியானது அல்ல என்றும், ஈரான் தனது வாக்குறுதிகளை மீறி ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் அந்நாட்டின் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா தயங்காது என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இத்தாலியில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சிமாநாட்டின் இடையே, எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல்-சிசியைச் சந்தித்துப் பேசுவதற்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் இந்த விவகாரம் குறித்துக் கூறியதாவது:
"ஈரானுடன் இப்போது அறிவிக்கப்பட்டிருப்பது இறுதியான ஒப்பந்தம் கிடையாது. அது வெறும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மட்டுமே. வரும் காலங்களில் ஈரான் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை நாங்கள் மிக உன்னிப்பாகக் கண்காணிப்போம்.
ஒருவேளை அவர்கள் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை என்றால், நாங்கள் மீண்டும் அவர்கள் தலைக்கு நேராகக் குண்டுகளை வீசும் ராணுவத் தாக்குதல்களுக்கு உடனடியாகத் திரும்புவோம். இந்த ஒப்பந்தம் எனக்குப் பிடிக்கவில்லை என்றால், நாங்கள் மீண்டும் பழையபடி தாக்குதலைத் தொடங்குவோம்."
மேலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரானின் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காகக் கூறப்படும் 300 பில்லியன் டாலர் நிதியுதவி குறித்துப் பேசிய டிரம்ப், "இந்த நிதியுதவியில் அமெரிக்கா ஒரு 10 சென்ட் (பைசா) கூட முதலீடு செய்யாது. மற்ற வளைகுடா நாடுகள் இதில் முதலீடு செய்ய விரும்பினால் அது அவர்களின் விருப்பம். ஆனால், இப்போதைக்கு ஈரான் இதற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பதே நல்லது" என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சுமார் நான்கு மாதங்களாக நடைபெற்று வந்த போர், கடந்த சில தினங்களுக்கு முன்பு எட்டப்பட்ட இந்த முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முழுமையாகத் திறக்கப்படவுள்ளதால் உலகளாவிய எரிசக்தி சந்தை பெரும் நிம்மதியடைந்துள்ள சூழலில், டிரம்பின் இந்த அதிரடி எச்சரிக்கை தற்போதைய சர்வதேச அரசியல் அரங்கில் மீண்டும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.



