விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல் குளம் கிழக்குத் தெருவை சேர்ந்த பொன்னுபாண்டியன் என்பவரின் வீட்டில், விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரிப்பு நடைபெற்று வந்தது. நேற்று மதியம், தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. தீ வேகமாக பரவி, அங்கு குவிந்து இருந்த பட்டாசுகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின.
இந்த விபத்தில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கீழகோதாநாச்சியாபுரத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (18), விஜயகரிசல் குளத்தை சேர்ந்த முத்துலட்சுமி (70) மற்றும் சண்முகத்தாய் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், அப்பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (55) கடுமையாக காயமடைந்து, தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் கிடைத்தவுடன் வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்புப்பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டின் உரிமையாளர் பொன்னுபாண்டியனை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தின் காரணம் மற்றும் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.