தமிழ்நாடு

“ தேவைப்பட்டால் என்கவுன்ட்டர்கள் தவிர்க்க முடியாது” – அமைச்சர் ரகுபதி

top-news



புதுக்கோட்டை: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலைமை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, “என்கவுன்ட்டர் தேவைப்பட்டால், அதை தவிர்க்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் (சர்டிபிகேட்) கொடுக்க வேண்டியதில்லை. அவரிடம் இருந்து அதைப் பெற எதிர்பார்க்கவும் இல்லை. மக்கள் தாங்களே தமிழகத்தில் நலமாகவும், வளமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அவர்களது நம்பிக்கையே எங்களுக்குப் போதுமானது,” என்றார்.

மேலும், “கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் எந்த இடத்தில் நடந்தாலும், போலீசார் அதை உடனடியாக கண்டுபிடித்து, குற்றவாளிகளை பிடித்து, அவர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். எனவே, அரசு தரப்பில் சட்ட ஒழுங்கு மீதான உறுதிப்படையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என அவர் தெரிவித்தார்.

அதிகாரிகள் விசாரணைக்காக தனியாகச் செல்லும் சூழ்நிலைகளில் சில நேரங்களில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும், அவ்வாறான நேரங்களில் என்கவுன்ட்டர் போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

“இது போன்ற பிரச்சினைகள் தமிழகம் மட்டும் இல்லாமல், வடமாநிலங்களில் இன்னும் மோசமான நிலைகளில் நடைபெறுகின்றன. எனவே, தமிழகத்தில் தற்போதைய நிலைமை ஒப்பீட்டளவில் நல்ல வகையில் உள்ளது,” என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார்.