சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (6.8.2025) நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2,538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி உரையாற்றினார்.
முதல்வர் தனது உரையைத் தொடங்கியபோது, தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு செய்தியை பகிர விரும்புகிறேன் என்று கூறி, “நேற்று இரவு முதல் இது தான் Talk of the Town, ஏன் Talk of the Nation என்பதே இதுதான்! நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் படி உறுதி செய்யப்பட்ட தகவல்,” என்றார்.
அவர் தொடர்ந்து, “14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு மீண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. கடைசியாக 2010-11ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஆட்சியில்தான் 13.12 விழுக்காடு வளர்ச்சி கிடைத்தது. இப்போது, கழக ஆட்சியில் மீண்டும் அந்த சாதனையை எட்டியிருக்கிறோம். இது இந்தியாவில் வேறு எந்த பெரிய மாநிலமும் அடையாத மாபெரும் வெற்றி. இந்த வெற்றி சாதாரணமாக கிடைத்ததல்ல. பல்வேறு சவால்கள், குற்றச்சாட்டுகள் மத்தியிலும் ஒற்றுமையாக உழைத்த நம் அரசின் அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தமிழ்நாட்டின் மக்களின் நம்பிக்கை காரணமாகவே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
முதல்வர் இந்த வெற்றியை தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார். “இது தனிப்பட்ட ஸ்டாலினின் வெற்றி அல்ல, நம்முடைய கூட்டுப் பயணத்தின் வெற்றி. 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்குடன் இயங்கும் திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிப் பயணத்திற்கு கிடைத்த சான்றிதழ் இது,” என்றார்.
மேலும், “இங்கு நிறுத்திக்கொள்ளமாட்டோம். இன்னும் உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணம் செய்ய வேண்டும். அதை திராவிட மாடல் 2.0 வழியாக தொடர்வோம்,” எனவும் வலியுறுத்தினார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் வழங்கப்பட்ட 2,538 பணிநியமன ஆணைகள் குறித்து பேசுகையில், “உதவிப் பொறியாளர்கள், நகர அமைப்பு அலுவலர்கள், இளநிலைப் பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் மூலம் 2,538 குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றப்பட்டுள்ளது. இளைஞர்களை முன்னேற்றுவதே நம் அரசின் முதன்மை பணி. அதற்காகவே நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என்றார்.
வேலைவாய்ப்பு ஏற்படுத்திய விவரங்களைப் பற்றியும் முதல்வர் விரிவாக விளக்கினார். “கடந்த நான்கு ஆண்டுகளில் TNPSC, TRB, MRB, TNUSRB தேர்வாணையங்கள் மற்றும் பல்வேறு துறைகள் வழியாக 1 இலட்சத்து 8 ஆயிரத்து 111 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வேலைவாய்ப்பு முகாம்களின் மூலம் 3 இலட்சத்து 28 ஆயிரத்து 393 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் வேலைவாய்ப்பு முகாம்களில் 2 இலட்சத்து 65 ஆயிரத்து 223 இளைஞர்கள் தனியார் துறைகளில் வேலை பெற்றுள்ளனர். விளையாட்டு துறையில் சாதனை படைத்த 84 விளையாட்டு வீரர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனுடன், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 89 இளைஞர்கள் ஒன்றிய அரசுப் பணிகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்; மேலும் 18 இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பணியில் அமர்ந்துள்ளனர். மொத்தத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் 6 இலட்சத்து 41 ஆயிரத்து 664 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன,” என்றார்.
அதேபோல் தொழில்வளர்ச்சி மற்றும் முதலீட்டைப் பற்றி பேசுகையில், “தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, 10 இலட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. இதன் மூலம் 2 இலட்சத்து 30 ஆயிரத்து 856 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதற்கு உகந்த அமைதியான சூழல், சட்ட ஒழுங்கு, திறமையான இளைஞர்கள், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் நம் அரசு உறுதி செய்துள்ளது,” என்றார்.
முதல்வர் மேலும், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, “கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. ஆனால் கல்வி மட்டும் போதாது, திறன் மேம்பாட்டும் அவசியம். 41 இலட்சம் மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பயனடைந்துள்ளனர்; 4 இலட்சம் மாணவர்கள் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தின் பயனடைந்துள்ளனர்; 6 இலட்சம் மாணவிகள் ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் பயனடைந்துள்ளனர். அடுத்த கட்டமாக கல்லூரிகளில் படிக்கும் 20 இலட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது,” என்று அறிவித்தார்.
இளைஞர்களை நோக்கி உரையாற்றிய முதல்வர், “நாள்தோறும் உலகம் புதுபித்து கொண்டிருக்கிறது. அதுபோல நீங்களும் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் தொழில் வாழ்க்கையில் தேக்கம் இருக்கக்கூடாது. உங்களுக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள்; அரசு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். அடுத்தகட்ட திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்,” என்று உறுதியளித்தார்.
இறுதியாக, பணிநியமன ஆணைகள் பெற்றவர்களை நோக்கி, “நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்கும், உங்கள் ஊருக்கும், இந்த அரசுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். மக்களிடம் அன்போடு நடந்து, அவர்களின் குறைகளை விரைவாகத் தீர்க்க உழையுங்கள். மக்களுக்கு துணையாக இருந்தால், மக்கள் என்றும் நமக்கு துணையாக இருப்பார்கள்,” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.


