தமிழ்நாடு

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்... எந்த ரூட் தெரியுமா?

top-news

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ள பயணிகளின் வசதிக்காகவும், சென்னையில் வாகன நெரிசலைக் குறைக்கவும், தாம்பரம், பெருநகர சென்னை மற்றும் ஆவடி போக்குவரத்து காவல்துறை சார்பில் சிறப்புப் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் குறிப்பாக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து முனையத்தை (KCBT) நோக்கிச் செல்லும் கனரக வாகனங்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.

கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதைகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணி முதல் கனரக வாகனங்களுக்குப் புதிய வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் ஆவடியில் இருந்து புறப்படும் கனரக வாகனங்கள்: இவை பூந்தமல்லியில் திருப்பிவிடப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாகச் சென்று ஜிஎஸ்டி சாலையை அடைய வேண்டும்.

மதுரவாயலில் இருந்து தாம்பரம் ஜிஎஸ்டி சாலை நோக்கி வரும் கனரக வாகனங்கள்: இவை மதுரவாயல் அருகே திருப்பிவிடப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாகச் சென்று ஜிஎஸ்டி சாலையை அடைய வேண்டும்.

காஞ்சிபுரத்திலிருந்து (வாலாஜாபாத் வழியாக) ஓட்டேரி நோக்கி வரும் கனரக வாகனங்கள்: இவை ஓரகடம் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாகச் சென்று ஜிஎஸ்டி சாலையை அடைய வேண்டும்.

திருப்பி வரும் பயணத்திற்கான மாற்றுப் பாதை (அக்டோபர் 21, 22)
விடுமுறைக்குப் பிறகு சென்னைக்குத் திரும்பும் பயணத்தை விரைவுபடுத்த, அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும்.

செங்கல்பட்டு வழியாக வரும் வாகனங்கள்: இவை வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.

சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் வாகனங்கள்: இவை ஓரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.

மேலும், இரும்புலியூர் பாலத்தின் அருகில் நெரிசல் ஏற்பட்டால், கனரக வாகனங்கள் உடனடியாக வண்டலூர் வெளிவட்டச் சாலை மற்றும் மதுரவாயல் புறவழிச் சாலை வழியாகத் திருப்பி விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான கூடுதல் அறிவுரைகள்

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களுக்குப் பயணிக்கும் பயணிகள், நெரிசலைத் தவிர்க்க கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (OMR) போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம்.

சாலை நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் மற்றும் பொத்தேரி ரயில் நிலையங்களிலிருந்து கூடுதல் புறநகர் ரயில்களும் இயக்கப்படுகின்றன.

பயணிகளின் வசதிக்காக, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து 2,092 சிறப்புப் பேருந்துகளும் அக்டோபர் 16 முதல் 19 வரை இயக்கப்பட உள்ளன.

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், போக்குவரத்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.