தமிழ்நாடு

மாம்பழக் கொள்முதல் வீழ்ச்சி: விவசாயிகளின் துயர்துடைக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

top-news

சென்னை: மாம்பழ கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி மற்றும் குறைவான கூழ் கொள்முதல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.


முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், "2025ஆம் ஆண்டின் மாம்பழப் பருவத்தில் மா விவசாயிகள் மற்றும் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய அரசின் தலையீட்டைக் கோரி நான் கடந்த 24.06.2025 அன்று ஏற்கனவே ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதன் அடிப்படையில், பதப்படுத்தக்கூடிய மாம்பழ வகைகளைப் பயிரிட்ட விவசாயிகள், மாம்பழம் கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியாலும், மாம்பழக்கூழ் மிகக் குறைவான அளவில் கொள்முதல் செய்யப்பட்டதாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்," என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரச்சினையின் தீவிரம்:

மாம்பழ மகசூல் அதிகரித்தபோதும், பதப்படுத்தும் ஆலைகள் கொள்முதலைக் குறைத்ததாலும், ஏற்றுமதிச் சிக்கல்களாலும் மாம்பழத்தின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.5க்கும் குறைவாகச் சரிந்தது. இதனால் விவசாயிகள், விளைச்சலைச் சந்தைக்குக் கொண்டு வர முடியாமல் மரத்திலேயே காய்களைப் பழுக்கவிடுவதும், வீதிகளில் கொட்டுவதும் தொடர்ந்தது.

முக்கிய கோரிக்கைகள்:

மா விவசாயிகளின் துயர்துடைக்கும் வகையில், தனது முந்தைய கடிதத்தில் வலியுறுத்தியிருந்த முக்கியக் கோரிக்கைகளான,

மத்திய அரசு கொள்முதல் முகமைகள் மூலம் மாம்பழங்களை நியாயமான விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்.

மாம்பழக் கூழுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்க வேண்டும்.

மாம்பழச் சாறுகளில் பழக்கூழின் அளவு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 18 முதல் 20 சதவீதம் இருப்பதை உறுதி செய்ய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

மாநில அரசும் மத்திய அரசும் 50:50 பங்களிப்பு முறையில் இழப்பீடு வழங்கிட ஏதுவாக, PM-AASHA சந்தைத் தலையீட்டுத் திட்டத்தை (MIS) தமிழ்நாட்டில் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

ஆகியவற்றில் பிரதமர் விரைந்து தலையிட்டு, மா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.