திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய சண்முகவேல் (57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் அழகுராஜா ஆகியோர் 05.08.2025 இரவு 11 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிக்கனூத்து அருகே தனியார் தோட்டச் சாலையில் நடந்த அடிதடி சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவர்கள் விசாரிக்கச் சென்றனர்.
அங்கு அடிதடியில் ஈடுபட்டிருந்த மூவர் திடீரென இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் தாக்கினர். இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் துயரச் செய்தி மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், “சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் உயிரிழப்பு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்” என்று கூறியதோடு, இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் சண்முகவேலின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் அறிவித்துள்ளார்.


