தமிழ்நாடு

விஜயலட்சுமியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்.. வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்!

top-news

புதுடெல்லி: நடிகை விஜயலட்சுமி தொடர்பாக தான் பேசிய அவதூறான கருத்துக்களுக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், சீமானுக்கு எதிரான வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.


பிரமாணப் பத்திரத்தில் சீமான் உறுதி:

நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் புகார் மற்றும் அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், சீமான் தரப்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், "எனது சொல் மற்றும் செயல்களால் நடிகை விஜயலட்சுமிக்கு வலி அல்லது காயம் ஏற்பட்டிருந்தால், நிபந்தனையின்றி மன்னிப்பு கோருகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், விஜயலட்சுமிக்கு எதிராக தான் வெளியிட்ட அனைத்து அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும், இனி எந்தவொரு ஊடகத்திலும் அவர் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என்றும் சீமான் தரப்பு உறுதி அளித்தது.

வழக்கு முடித்து வைப்பு:

முன்னதாக, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான முடிவுக்கு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. மன்னிப்பு கோரத் தவறினால், சீமானின் கைது தடை ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், சீமானின் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிக்கையைத் தொடர்ந்து, நடிகை விஜயலட்சுமி தரப்பும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி, சீமானுக்கு எதிரான புகாரைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தது.

இரு தரப்பினரின் பரஸ்பர மன்னிப்பு மற்றும் சுமூக உடன்பாட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டது. அத்துடன், பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்ட உறுதிமொழியைப் பின்பற்றி, இரு தரப்பினரும் இனி எந்தவிதமான குற்றச்சாட்டுகளையோ, அவதூறுகளையோ பரப்பக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.