சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் அறைகள் எடுத்துத் தங்கிப் போதைப் பொருள் பார்ட்டி நடத்திய 3 பெண்கள் உட்பட 18 பேரை போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கீழ்ப்பாக்கம் ஈ.வி.ஆர். சாலையில் உள்ள ஒரு பப் (Pub)-ஐ ஒட்டியுள்ள ஹோட்டலில் சில அறைகளை வாடகைக்கு எடுத்து ஒரு குழுவினர் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், அங்கு திடீர் சோதனை நடத்திய போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார், 3 அறைகளில் வைத்துப் போதைப் பார்ட்டி நடத்திக்கொண்டிருந்த 3 பெண்கள் உட்பட 18 பேரைப் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்களைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு இசையமைப்பாளரின் மகள் ஒருவரும் அடங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களிடமிருந்து கஞ்சா, 3 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 18 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 18 பேரும் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பிறகு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதியின் உத்தரவின் பேரில், அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


